
பாமகவில் நெருக்கடியான சூழல் இருப்பது உண்மைதான்; மிக விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (மே 16) கூட்டினார். இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொருளாளர் திலகபாமா, 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
மேலும், கட்சியின் மாவட்ட அமைப்பு ரீதியிலான 80 சதவீத நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தைலாபுரத்தில் இன்று (மே 17) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி பேசியதாவது,
`பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் வலிமையான அமைப்புகள். அந்த வலிமையை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்தது. கேள்வி கேட்பது உங்களின் கடமை; பதில் சொல்வது எங்களின் கடமை. ஒரு கட்சி என்றால் சில சலசலப்புகள், பிரச்னைகள், நெருக்கடிகள் வருவது இயல்புதான். இந்த நிலை அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறது.
அப்படி, பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. நான் எதையும் மறைத்துப் பேச விரும்பவில்லை. மிக விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. உதாரணத்திற்கு நேற்று இரவு வரை அய்யாவிடம் பேசினேன், சின்னய்யாவிடம் இரவும் காலையும் பேசினேன். மிக விரைவில் சுமூகமாக தீர்வு வரவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
பாமகவின் வலிமையை மேலும் அதிகரிக்கவேண்டும். வலிமையான வகையில் தேர்தலை சந்திக்கவேண்டும். அதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் இருவரும் சந்திப்பார்கள். அதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளோம்’ என்றார்.