
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் முரண்கள் இருந்தால் அரசிடம் தமிழக ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கலாம், அதற்காக மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, பி. வில்சன், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டு வந்தார்கள். தமிழக ஆளுநர் சார்பில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி ஆஜராகி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்.10) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
`கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்புரிமைக்கு இடம் கிடையாது. அமைச்சரவை ஆலோசனைபடிதான் ஆளுநர் செயல்படமுடியும். ஆளுநர் விருப்பப்படி முடிவுகள் எடுத்தால் மசோதாக்கள் செயல் இழக்க செய்வதாகிவிடும்.
அரசியல் சாசனத்தின்படி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை; குறிப்பாக மறு நிறைவேற்றம் செய்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பக்கூட அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் கூறியதாவது,
`அரசியல் நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு திருப்பி அனுப்பினாலே ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மசோதாவில் உள்ள முரண்களை அரசிடம் ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கலாம். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்; மசோதாக்களை கிடப்பில் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றனர்.
இதைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இந்த வழக்கு மீதான விசாரணை முடிவுக்கு வந்ததாக அறிவித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்கள்.