உழவர்களுக்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம்: ராமதாஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதிதான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
உழவர்களுக்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம்: ராமதாஸ்
1 min read

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்படி உறுதி செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

2025-2026 மத்திய பட்ஜெட் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (பிப்.01) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

`இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிரந்தரக் கழிவு ரு. 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரூ. 12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கம், 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பது, அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

பள்ளிக் கல்விக்கு ரூ. 78572.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், ரயில்வே திட்டங்கள் குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதிதான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்படி உறுதி செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in