
கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணை இன்று (அக்.3) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான கோவை வடவள்ளியைச் சேர்ந்த 69 வயதான காமராஜ் என்பவர், மூளைச்சலவை செய்யப்பட்டு ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தன் இரு மகள்களையும் மீட்டுத்தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது, மேலும் ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அக்.4-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் அக்.1-ல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஈஷா யோகா மையம். இன்று (அக்.3) இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஈஷா யோகா மைய விவகாரத்தில் தமிழக காவல் துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக நடந்துவரும் வழக்கை எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.