
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் காண்பிக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நடப்பாண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன.6-ல் தொடங்கியது. சட்டப்பேரவை நடவடிக்கைகள், முதலில் சட்டப்பேரவை யூடியூப் சேனலில் நேரலையாகவும், அதன்பிறகு காணொளியாகவும் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் சட்டப்பேரவை காணொளியில் சபாநாயகர், அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவது மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவது காணொளிகளில் காண்பிக்கப்படவில்லை.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
`யார் அந்த சார்?’ என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால் மீண்டும் கேட்கிறேன், யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று திமுக அரசு முயற்சிப்பது ஜனநாயகப் படுகொலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவை, பொதுமக்களின் தேவையைச் சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை. திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!’ என்றார்.