
அரசுப் பேருந்துகளில் `தமிழ்நாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, `அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்கு தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
`தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்பதற்குப் பதிலாக, `அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மட்டுமே அரசுப் பேருந்துகளில் இடம்பெற்றுள்ளதாகவும், `தமிழ்நாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் அரியலூரில் இன்று (ஜூன் 4) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,
`தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளில், அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று (மட்டுமே) இருக்கிறது; தமிழ்நாடு என்ற பெயரைக் காணவில்லை என்று ஒரு சர்ச்சை சமீபத்தில் கிளம்பியுள்ளது. அதற்கான பதிலை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2012-ல் தொடங்கி வைத்த பேருந்துகளில், அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றுதான் இருக்கிறது (கைபேசியில் புகைப்படத்தைக் காட்டுகிறார்). அப்போதே `தமிழ்நாடு’ என்ற வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.
காரணம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்று எழுதினால் அது நீளமாக இருக்கும். மேலும், படிப்பதற்கு வசதியாக இல்லை என்ற காரணத்தினால் அதிமுக ஆட்சிக்காலத்தின்போதே இது மாற்றப்பட்டது.
2012-ல் இது நடந்தது, இன்றைக்கு 2025-ல் 13 ஆண்டுகள் கழித்து ஏதோ புதிய செய்தியைப்போல சிலர் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சேவை வழங்கப்படுகிறது.
புதிய பேருந்து சேவைகள் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகின்றன. எதை குற்றம் சொல்வது என்று தெரியாமல், திடீரென `தமிழ்நாடு’ என்பது இல்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்துள்ளனர். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. இது திமுக ஆட்சியில் நடந்தது என்று பரப்பப்படுகிற செய்திகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்றார்.