2026 தேர்தலில் சூர்யா போட்டியிடுகிறாரா?: சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணன் சூர்யா களமிறங்கப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
2026 தேர்தலில் சூர்யா போட்டியிடுகிறாரா?: சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்
https://www.instagram.com/actorsuriya/?hl=en
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சூர்யா போட்டியிடுவது குறித்து சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சூர்யாவால் தொடங்கப்பட்ட அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயன்பெற்று கல்லூரிப் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.

அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் அண்மையில் சென்னையில் விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த விழா பேசுபொருளான நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சூர்யா போட்டியிடவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

இந்நிலையில், இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தரப்பில் அதன் செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜ் மற்றும் அமைப்பாளர் ஜி. ஹரிராஜ் ஆகியோர் இன்று (ஆக. 20) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

`கடந்த சில நாள்களாக அண்ணன் சூர்யாவை பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணன் சூர்யா களமிறங்கப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்கள் ஆகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in