அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?

உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜிக்கு பதில் அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?
1 min read

அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.26) ஆதிதிராவிர் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கம்போல அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் முதல் அலுவலாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சட்டத்திற்குப் புறம்பாக பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவை, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்து. ஆனால், அவருக்குப் பதில் அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 26-ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் சிறையில் இருந்து அதே நாள் வெளியே வந்த செந்தில் பாலாஜி, ஒரு நாள் கழித்து மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஏப்.23-ல் நடைபெற்றபோது, `ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்.28-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதனால், ஒரு வேளை அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யும் பட்சத்தில், உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நடைபெறும் விவாதத்தில் அவர் பங்கேற்று பதிலளிக்க முடியாது என்பதால் மாற்று ஏற்பாடாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இதை முன்வைத்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in