சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.
இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதன்படி தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலங்களில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ,
`15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரை இதற்கு மேலும் சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வழக்கை நடத்திமுடிப்பதற்கும் காலதாமதம் ஆகும்.
எனவே இரண்டையும் கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் வெவ்வேறானது.
முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைப் போல செந்தில் பாலாஜி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றார்.