18-வது மக்களவை தேர்தல் பரப்புரையின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதியிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர்.
நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் பரப்புரையின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷிடம் என்பவரிடம் இருந்து ரூ. 4 கோடி பணம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை அடுத்து சதீஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ரூ. 4 கோடி பணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக, நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் போன்ற பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர்.
அடுத்தடுத்து நடந்த விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட இந்த பணத்தில் ஹவாலா புரோக்கர்களாக சூரஜ் மற்றும் பங்கஜ்லால் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது சிபிசிஐடி காவல்துறையினருக்குத் தெரியவந்துள்ளது. மேலும், தன்னிடம் இருக்கும் தங்கக் கட்டிகளை மாற்றி பணமாக தருமாறு இந்த ஹவாலா புரோக்கர்களிடம் புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வகணபதி கேட்டதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த அக்.25-ல் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி செல்வகணபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக 2 மாத காலம் அவகாசம் கோரியிருந்தார் செல்வகணபதி.
இந்நிலையில் புதுச்சேரிக்கு நேரில் சென்று செல்வகணபதியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.