முதல்வர் ஸ்டாலினின் புதுமைப் பெண் திட்டத்துக்கு எதிராக பழமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு என விமர்சித்துள்ளார் விசிக எம்.பி. து. ரவிக்குமார்.
`தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக ஒரு செய்தி வருகிறது’ என இந்து சமய அறநிலையத்துறையை கண்டிக்கும் வகையில் நேற்று (நவ.5) விடுதலை நாளேட்டில் ஒரு செய்தி வெளியானது
இந்த செய்தியைக் குறிப்பிட்டு, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் ரவிக்குமார் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் அமைச்சர் பி.கே. சேகர் பாபு.
கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை’ என்றார்.