
நாதக முன்னணி தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு, எங்கள் கட்சியில் இது களையுதிர் காலம் என்று பதிலளித்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் வரும் மார்ச் 3-ம் தேதி நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான பேனரில், அவரது பெயருக்குக் கீழே சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், அந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ போன்ற திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெயர்களுக்குக் கீழே அவர்களின் கட்சிப் பதவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை முன்வைத்து நாதகவில் இருந்து காளியம்மாள் விலகவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது.
இது தொடர்பாக காளியம்மாளிடம் கேட்டதற்கு, `அனைத்திற்கும் விரைவில் பதில் கூறுகிறேன்’ என்று பதிலளித்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.22) காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது,
`அது குறித்து எனக்கு தெரியவில்லை. இந்த கட்சிக்குள் இருந்து இயங்குவதற்கும், விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் அவர் இருந்தார். நான்தான் கட்சிக்குள் அவரை அழைத்து வந்தேன்.
என் அருகில் நிற்பவர் கூட வேறு எதாவது அமைப்பிற்கு செல்லவேண்டும் என்றால் போகலாம். வரும்போது வாழ்த்துகள் என்று கூறுவோம், போகும்போது நன்றி என்று கூறுவோம். இதுதான் எங்களின் கொள்கை. பருவகாலத்தில் இலையுதிர்காலம் என ஒன்று இருக்கும். அதுபோல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்’ என்றார்.