
சில ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு நிலுவையில் இருப்பதால், இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வரும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய தேர்தல் தள்ளிபோக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்ட ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 12,525 கிராம ஊராட்சிகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ல் முடிவுக்கு வருகிறது.
காலியாகவுள்ள இந்த உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறவேண்டும். ஆனால் சில கிராம ஊராட்சிகளை அதற்கு அருகில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதால் திட்டமிட்டபடி டிசம்பரில் இந்த தேர்தல் நடைபெறாது என தெரிகிறது.
இத்தகைய இணைப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 506 கிராம ஊராட்சிகளும், அத்துடன் 47 பேரூராட்சிகளும், 5 நகராட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைய வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பொதுமக்கள் எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக, திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைவதற்கு நாரணம்மாள்புரம் மற்றும் சங்கர் நகர் பேரூராட்சிகளின் பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே நேரம், திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைவதற்கு கொண்டாநகரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சியுடன் இணைந்தபிறகு, தங்கள் பகுதியில் ஏற்படும் சொத்து வரி உயர்வு, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிறுத்தம் போன்ற மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகளை முன்வைத்து, தங்கள் கிராம ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .