தமிழ்நாட்டில் முன்னேறுகிறதா பாஜக ?

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முன்னேறுகிறதா பாஜக ?

18வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையில் இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது.

ஜூன் 4 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜூன் 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. அப்போது, `தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, தமிழ்நாட்டில் 2026-ல் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்’ எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை கூறியபடி தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறதா பாஜக என ஓர் அலசல்,

2014 மக்களவைத் தேர்தலை தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தது பாஜக. போட்டியிட்ட 8 இடங்களில் கன்னியாகுமரியில் மட்டும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

மேலும் இந்தத் தேர்தலில் தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் 5.5% வாக்குகளைப் பெற்றது பாஜக. தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18.8%.

2024 மக்களவைத் தேர்தலை பாமக, தமாகா, அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தது பாஜக. போட்டியிட்ட 23 இடங்களில் எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் 11.24% வாக்குகளைப் பெற்றிருக்கிறது பாஜக. 2014 தேர்தலை ஒப்பிடும்போது இந்த வாக்கு சதவீதம் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் பெற்ற இடங்கள் பின்வருமாறு:

இரண்டாவது இடம் (9 தொகுதிகள்) - தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை

மூன்றாவது இடம் (13 தொகுதிகள்) - தென்காசி, தஞ்சாவூர், பெரம்பலூர், பொள்ளாச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, வடசென்னை, கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, விருதுநகர், சிதம்பரம், திருப்பூர்

நான்காவது இடம் (1 தொகுதி) - நாகப்பட்டினம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in