இருட்டுக் கடை உரிமையை மாற்றித் தருமாறு வரதட்சணைக் கொடுமை செய்வதாக, கடையின் உரிமையாளர் மகள் புகாரளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற அல்வா கடை என்றால் அது நெல்லையப்பர் கோயில் எதிரில் உள்ள இருட்டுக் கடை அல்வா கடைதான். இக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். கவிதா சிங் மகளுக்கு 40 நாள்களுக்கு முன்பு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கவிதா சிங்கின் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமான 40 நாள்களில் கவிதா சிங் மகள் தரப்பில் வரதட்சணைப் புகார் எழுந்துள்ளது.
இருட்டுக் கடை உரிமையை மாற்றித் தருமாறு வரதட்சணைக் கொடுமை செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கணவர் பல்ராம் சிங் மீது நெல்லை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கவிதா சிங் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
"திருமணமாகி தாலி கட்டிய அடுத்த நிமிடத்திலிருந்து பணத்துக்காகவும், வரதட்சணைக்காகவும் எங்களுடையத் தொழிலை எழுதிக் கொடுக்கச் சொல்லி என் மகளை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். 41 நாள்கள் அவர்களுடைய வீட்டில் என் மகள் இருந்துள்ளார் என்றார், ஒவ்வொரு முறையும் என் மகளை அந்தளவுக்கு துன்புறுத்தியிருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார்கள். இதுதவிர மகளின் கணவருக்கு வேறொரு பொண்ணுடன் தொடர்பு இருப்பதையும் பிறகு தான் தெரிந்துகொண்டோம். அந்தப் பொண்ணை வைத்துக்கொண்டே என் மகளை பணியாள் போட நடத்தி துன்புறுத்தியிருக்கிறார். இதுபற்றி தாய், தந்தையிடம் ஏதாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்கள்.
இதன்பிறகு, என் மகளுடைய மாமனாரும், கணவரும் சேர்ந்து நீ உங்கள் அம்மா, அப்பாவிடமிருந்து அனைத்தையும் எழுதி வாங்கினால் மட்டுமே வர வேண்டும் என மிரட்டியுள்ளார்கள். இங்கு வந்த பிறகு தான் இது எங்களுக்குத் தெரிய வந்தது.
இவர் இதற்கு மறுத்துள்ளார். அப்படியென்றால் விவாகரத்து கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார்கள். அப்படியென்றால், உன் கண்முன்னே வேறொரு பொண்ணுடன் வாழ்ந்து காட்டுவேன் என மிரட்டியுள்ளார். அவருடையத் தந்தையுடன் பேசியதற்கு, என் தொழிலே உண்மையைப் பொய்யாகச் சொல்வதும் பொய்யை உண்மையாகச் சொல்வது தான் என்கிறார். மேலும், தனக்கு பாஜக ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்.
இதற்கு யாரும் உதவவில்லை எனில் யாரையும் வாழ விடமாட்டேன். உங்களுடையத் தொழிலை எழுதிக்கொடுத்தே ஆக வேண்டும் என மிரட்டினார்.
நேற்று இரவு ஆணையர் அலுவலகத்திலிருந்து விசாரணைக்கு முறையிடப்பட்டது. இதன்பிறகு, செய்தியாளர் ஒருவரை அழைத்து மிரட்டியுள்ளார். அனைத்தையும் மிரட்டிவிட்டு, அவற்றை அழித்துவிட்டு இன்று காலை மன்னிப்பு கோரி குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இதற்கு முன்பு செய்த அனைத்துக்கான ஆதாரங்களும் சம்பந்தப்பட்ட துறையிடம் கொடுத்துள்ளோம்.
நாங்கள் பாரம்பரியமாகச் செய்து வரும் தொழில் இது. பொதுமக்களை நம்பிதான் நாங்களும் இருக்கிறோம். இந்தத் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. ஆனால், இந்த வாழ்வாதாரத்தில் கையை வைப்பதைப்போலவே ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தி வருகிறார். காவல் ஆணையரிடம் புகார் கொடுத்த பிறகும்கூட ஒரு செய்தியாளர்களை மிரட்டுகிறார்கள் என்றால், பாஜக என்பதை அடிப்படையாக வைத்து அச்சுறுத்துகிறார்கள். நான் வழக்கறிஞர் என் தொழில் இப்படி தான் என்று துணிச்சலுடன் செய்கிறார்கள்" என்றார் கவிதா சிங்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல் துறை சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்தரப்பினர் இதுவரை விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. அவர்கள் தரப்பு கருத்துகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.