ஜெயக்குமார் மரண வழக்கு: தங்கபாலுவிடம் விசாரணை நிறைவு
படம்: https://twitter.com/KV_Thangkabalu

ஜெயக்குமார் மரண வழக்கு: தங்கபாலுவிடம் விசாரணை நிறைவு

"எப்போது விசாரணைக்கு அழைத்தாலும், நான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன்."

ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல் துறை தரப்பில் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக தங்கபாலு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி பகுதி எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஜெயக்குமாரின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் புகார் மனுவை அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஜெயக்குமாருக்கும் தனக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என ரூபி மனோகரன் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக தங்கபாலுவிடம் விசாரணை நடத்த தனிப்படை முடிவு செய்தது. தனிப்படையின் அழைப்பாணைக்கிணங்க தங்கபாலு இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியில் தனிப்படையைச் சேர்ந்த களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், தங்கபாலுவிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப் பிறகு தங்கபாலு கூறியதாவது:

"மூன்று நாள்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் என்னைத் தொடர்பு கொண்டார். இந்த வழக்கில் எந்தெந்த வழிகளில் என்னால் உதவ முடியுமோ, அதற்கு நான் தயாராக இருப்பதாக அவரிடம் கூறினேன். அதைப்போலவே, இன்று அவரது அழைப்பாணையை ஏற்று எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும், நான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன்" என்றார் தங்கபாலு.

logo
Kizhakku News
kizhakkunews.in