சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் பதில் மனுத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!
1 min read

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து இன்று (மார்ச் 3) உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப் பதியப்பட்டது.

தனக்கு எதிராக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் சீமான்.

அந்த மனுவில், `கடந்த 2011-ல் அளித்த புகாரை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிகை கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த வழக்கை காவல்துறை முடித்து வைத்தது. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றது தெளிவாகிறது என்று கூறி, சீமான் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் வழக்கு மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்.28-ல் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தார் சீமான். எனினும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், புகாரளித்த நடிகை வழக்கை திரும்பப் பெற்றுள்ளார் என்றும், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் சீமான் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காண அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக இன்று (மார்ச் 3) செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது,

`இந்த வழக்கை விசாரித்தால் அதில் முழுக்க பொய்யும், அவதூறும் மட்டுமே இருக்கும். இது திட்டமிட்டு என் மீது சுமத்தப்பட்ட பழி. அதனால்தான் நீதிமன்றத்திற்கு சென்றேன். இந்த இடைக்காலத் தடையை வரவேற்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எடுப்பேன். இந்த வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டுவதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in