உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தமிழக உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி சென்னையில் இன்று (செப்.23) நடந்த அரசு விழாவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவை பின்வருமாறு:
`கடந்த 2008-ல் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்கிற மாணவன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மரணமடைந்ததை அடுத்து அந்த மாணவனின் பெற்றோர் அவனது உடல் உறுப்புகளைத் தானம் செய்தனர். இதை அறிந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அம்மாணவனின் பெற்றோரைப் பாராட்டினார்.
இதை அடுத்து அதே வருடம் செப்டம்பர் 5-ல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளைப் பெறுவதற்கான உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றுவரை மூளைச்சாவு அடைந்த 1,998 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
உடல் உறுப்பு தானம் செய்த நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று கடந்த வருடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடத்தில் 272 உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ. 25 லட்சம் வரை தமிழக அரசு வழங்குகிறது. உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செய்ய விரும்பும் நபர்கள் `விடியல்’ எனும் தானியங்கி செயலி வழியாக உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செய்யலாம்’ என்றார்.