
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த வத்திராயிருப்பு கிராமத்திற்கு அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களில் கூமாப்பட்டியும் ஒன்றாகும்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அருகிலிருக்கும் அணை பகுதியில் குளித்துக்கொண்டே, சுற்றியிருக்கும் இயற்கை சூழலை காட்டியபடி, வாழ்வில் நிலவும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரவேண்டுமென்றால் தங்கள் கிராமத்திற்கு வருமாறு கூறி `ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க’ என்று அடுத்தடுத்து இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் வெளியிட, அது மிகப்பெரிய அளவில் வைரலானது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரும் கூமாப்பட்டி கிராமத்திற்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள். ஆனால் அந்த கிராமத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த கோவிலாறு மற்றும் பிளவக்கல் அணைகளுக்குச் செல்ல தமிழக நீர்வளத்துறை தடை விதித்துள்ளது.
அத்துடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் செல்லவும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து ரீல்ஸை நம்பி அங்கே சென்ற பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கும் பேட்டிகள் புதிய தலைமுறையில் வெளியாகின.
இதற்கிடையே பிளவக்கல் அணை பராமரிப்புக்காக முதல்வர் ஸ்டாலின் முன்பு அறிவித்தபடி ரூ. 10 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவில்லை என்று கூமாப்பட்டியை பிரபலப்படுத்திய இளைஞர் செய்தி ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
`ரூ 10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கூமாப்பட்டி சிறிய கிராமம் என்றும், சுற்றுலாப் பயணிகள் யாரும் (ரீல்ஸை) நம்பி வரவேண்டாம் என்றும் நீர்வளத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.