
சென்னை நகரம் நிறையவே மாறிவிட்டதாகவும், ஒரு மாநிலமாக நாட்டிலேயே முதலாவது இடத்தை தமிழ்நாடு எட்டியுள்ளதாகவும் பேசியுள்ளார் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான இந்திரா நூயி.
தமிழ்நாடு அரசு தொழில்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu), கடந்த பிப்.26 வெளியிட்ட காணொளியில் இந்திரா நூயி கூறியதாவது,
`அனைவருக்கும் வணக்கம். நான் இந்திரா நூயி. நான் பிறந்ததும், வளர்ந்ததும் சென்னையில்தான். இதுதான் என் பூர்வீகம். அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் இங்குதான் முடித்தேன். இங்கே வேலையும் பார்த்திருக்கிறேன். இதுதான் எனது பூர்வீகம்.
இங்கு திரும்பி வருவது என் இல்லத்திற்கு திரும்பி வருவதைப்போன்றது. மகத்தான வகையில் சென்னை நிறையவே மாறிவிட்டது. நான் வளர்ந்தபோது, தூக்கம் நிறைந்ததாகவும், அமைதியாகவும், இனிமையாகவும் சென்னை இருந்தது. ஆனால் இன்றைக்கு சென்னை ஒரு பரபரப்பான பெருநகரமாக உள்ளது.
எங்கு திரும்பினாலும் கட்டடங்கள், நிறைய செயல்பாடுகள், வணிகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் கிடைக்காதது எதுவுமே இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. உண்மையிலேயே பரபரப்பான பெருநகரமாக இது மாறிவிட்டது.
மிகவும் முக்கியமாக, ஒரு மாநிலமாக நாட்டிலேயே முதலாவது இடத்தை எட்டியுள்ளது தமிழ்நாடு. அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது மனநிறைவாக உள்ளது. கல்வியும், குழந்தை பராமரிப்பும் உயர்ந்த நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருவது மாயாஜாலம்போல உள்ளது.
தற்போது திரும்பிவந்து, சென்னை மற்றும் தமிழ்நாட்டைப் பார்க்கும்போது நான் மிகவும் நேர்மறையாகவும், நம்பிக்கையாகவும் உணர்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.