அமெரிக்காவின் அஷ்யூரண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்தானது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாநிலத்தை மாற்றும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க கடந்த ஆகஸ்ட் 27-ல் சென்னையில் இருந்து கிளம்பி அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார்.
ஆகஸ்ட் 29-ல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 900 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு ஆகஸ்ட் 31-ல் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். செப்.03-ல் ஈட்டன், அஷ்யூரண்ட் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் ஈட்டன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ. 200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்க முடிவு செய்யப்பட்டது.
பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அஷ்யூரன்ட் நிறுவனம் அட்லாண்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தைச் சென்னையில் நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.