பாஜகவின் பேராசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முதல்வர் எதிர்ப்பு
ஒரு கட்சியின் பேராசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்தாண்டு செப்டம்பரில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான பரிந்துரைகள் அடங்கிய 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியாவின் பலதரப்பட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணித்து, கூட்டாட்சி முறையின் மாண்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில் நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். தேர்தல் நடைபெறும் நேரம், பிராந்திய விவகாரங்கள் மற்றும் அரசு நிர்வாகத்துக்கு முன்னுரிமை அளிப்பது என பரந்த வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாட்டில் இதை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்த அரசு நிர்வாகம் இயல்பாக செயல்படுவதைக் குலைத்து, அனைத்து அலுவல் செயல்பாடுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்தியமான முயற்சி தேவை.
பாஜகவின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இந்த ஒட்டுமொத்த திட்டமும். ஆனால், பாஜகவால் ஒருபோதும் இதைச் செயல்படுத்த முடியாது. ஒரு கட்சியின் பேராசைக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. திசைதிருப்பும் யுத்திகளில் நேரத்தை வீணடிக்காமல் வேலைவாய்ப்பின்மை, விலை உயர்வு, மாநிலங்களுக்கு சம பங்களிப்பு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.