பாகிஸ்தான் பெண்ணுள் துடிக்கும் இந்திய இதயம்: சென்னையில் நடந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை!

"பணமே இல்லாமல்தான் இந்தியா வந்தேன்" - இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் தாயார்.
பாகிஸ்தான் பெண்ணுள் துடிக்கும் இந்திய இதயம்: சென்னையில் நடந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை!
படம்: ஏஎன்ஐ

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷித் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு சென்னையில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷாவுக்கு 2019-ல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த இதயப் பிரச்னைகள் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களைச் சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்காக அவர் சென்னை வந்தார். அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜூனில் அவர் மீண்டும் சென்னை வந்தார்.

இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருளாதார சிக்கல்களும் ஆயிஷாவுக்கு இருந்திருக்கிறது. சென்னையிலுள்ள ஓர் அறக்கட்டளையின் உதவியுடன் பொருளாதார சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 31-ல் தில்லியிலிருந்து சென்னைக்கு ஓர் இதயம் கொண்டுவரப்பட்டது. இதைக் கொண்டு ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

ஆயிஷா ரஷித்தின் தாயார் சனோபர் கூறியதாவது:

"பாகிஸ்தானில் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. எனவே, மருத்துவர் கே.ஆர். பாலகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம்.

எங்களிடம் போதிய பணம் இல்லை. ஆனால், மருத்துவர்கள்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து, இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினார்கள். பணமே இல்லாமல்தான் இந்தியா வந்தேன். மருத்துவர் பாலகிருஷ்ணன் தான் அனைத்து வழிகளிலும் உதவினார்.

இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தியர் ஒருவரின் இதயம், பாகிஸ்தான் பெண்ணுள் துடித்துக்கொண்டிருப்பதை எண்ணியும் மகிழ்ச்சி கொள்கிறேன். இது சாத்தியமில்லை என்று நினைத்தேன். எனினும், நடந்தேறியுள்ளது" என்றார் சனோபர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in