மோடியின் ஆட்சியில் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரத்தை அடையும்: ஜெ.பி. நட்டா

"97 சதவீத மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆட்டோமொபைல் துறையிலும் உலகில் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது."
மோடியின் ஆட்சியில் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரத்தை அடையும்: ஜெ.பி. நட்டா

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அரியலூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

"பிரதமர் மோடியின் வலிமையான தலைமையில், வளர்ச்சியில் நாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. 2019-ல் உலகில் 11-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தது. தற்போது 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. 200 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளோம்.

2024-ல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தால், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடையும்.

மின்னணு துறையில் நாட்டின் உற்பத்தியும் ஏற்றுமதியும் 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ல் மொபைல் ஃபோன்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இன்று நிறைய மொபைல் ஃபோன்கள் இந்தியா தயாரிக்கப்பட்டவை என்ற முத்திரையும் வெளிவருவதைப் பார்க்கலாம். 97 சதவீத மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆட்டோமொபைல் துறையிலும் உலகில் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.

நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தால், இந்தியா மேலும் வளர்ச்சியடையும்" என்றார் நட்டா.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in