ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற மோசின் நக்வி: பிசிசிஐ விமர்சனம் | Asia Cup T20 |
படம்: https://x.com/BCCI

ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற மோசின் நக்வி: பிசிசிஐ விமர்சனம் | Asia Cup T20 |

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுப்பு.
Published on

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, அவர் ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்றதாக பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாயில் ஞாயிற்றுக்கிழமை மோதின. இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

உள்நாட்டு நேரப்படி சுமார் 10.30 மணிக்கு ஆட்டம் நிறைவடைந்தாலும், பரிசளிப்பு விழா நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். மோசின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் உள்ளார், பாகிஸ்தானில் அமைச்சராகவும் உள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்கான காசோலையைப் பெற்றார். இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் பரிசுகளைப் பெற்றார்கள். இவற்றுடன் பரிசளிப்பு விழா நிறைவடைந்தது. "இந்திய அணி தங்களுடைய விருதுகளை இன்றிரவு பெறப்போவதில்லை என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறி பரிசளிப்பு விழாவை நிறைவு செய்தார் சைமன் டூல்.

பரிசளிப்பு விழா மேடையில் வைக்கப்பட்ட ஆசியக் கோப்பையையும் அதிகாரி ஒருவர் காரணம் எதுவும் கூறாமல் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. பரிசளிப்பு விழா முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் கோப்பைக்காகக் காத்திருந்ததாகத் தெரிகிறது. இறுதியில் இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் கையில் கோப்பை இருப்பதாக நினைத்துக்கொண்டு வெற்றியைக் கொண்டாடினார்கள்.

பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

"ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையைப் பெற வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். காரணம், அவர் பாகிஸ்தானில் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார். எனவே, அவரிடமிருந்து கோப்பையைப் பெற வேண்டாம் என முடிவு செய்தோம்.

அதற்காக இந்திய வீரர்களின் பதக்கங்கள் மற்றும் கோப்பையை அவர் எடுத்துச் செல்ல வேண்டும் அர்த்தமல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பதக்கங்களும் கோப்பையும் விரைவில் இந்தியா வந்து சேரும் என நம்புகிறோம்.

நவம்பரில் ஐசிசி கூட்டம் துபாயில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் செயலுக்கு எதிராக மிகத் தீவிரமான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போகிறோம்" என்றார் தேவஜித் சைகியா.

ஆசியக் கோப்பை முடிந்தபிறகு, "வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டுள்ளது. நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதிலிருந்து, கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து இதுமாதிரி ஒன்று நடந்ததாக நான் பார்த்ததே இல்லை. கடின உழைப்பைச் செலுத்தி கோப்பையை வென்றுள்ளோம். நாங்கள் கோப்பையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். இதற்கு மேல் எதையும் கூற நான் விரும்பவில்லை.

கோப்பைகள் பற்றி பேசினால், என் கோப்பைகள் அனைத்தும் ஓய்வறையில் உள்ளன. அணியில் இடம்பெற்ற 14 வீரர்கள், உதவியாளர்கள் எல்லோரும் தான் எனக்கு உண்மையான கோப்பைகள்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

ஆசியக் கோப்பைப் போட்டி தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க இந்திய வீரர்கள் மறுத்து வந்தார்கள். எனவே, மோசின் நக்வியிடம் வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் விரும்பமாட்டார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், இறுதிவரை இந்திய வீரர்களின் கைகளில் கோப்பை வராமல் போனது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | Asian Cricket Council | Asian Cricket Council Chairman | PCB Chairman | Mohsin Naqvi | Suryakumar Yadav | BCCI | ACC | ICC | Devajit Saikia |

logo
Kizhakku News
kizhakkunews.in