மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்தாக்கம், இந்தியாவுக்கு அது தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
நேற்று (செப்.23) கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஹிந்து தர்ம வித்யா பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியவை பின்வருமாறு:
`ஐரோப்பாவில் தேவாலயத்துக்கும், மன்னருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றதால் மதச்சார்பின்மை கருத்து அங்கே உருவானது. ஆனால் இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிக்கொண்டிருந்தபோது, மதச்சார்பின்மை கருத்தாக்கம் குறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தியா தர்மத்தை மையமாகக் கொண்ட ஒரு நாடு, ஐரோப்பாவைப் போல மோதல்கள் இங்கு நடைபெறுவதில்லை என்று அரசியல் நிர்ணய சபையில் கருத்து முன்வைக்கப்பட்டது.
எனவே இந்தியாவுக்கு மதச்சார்பின்மை கருத்தாக்கம் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டு அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால் எமர்ஜென்சி காலகட்டத்தில் பாதுகாப்பின்மையாக உணர்ந்த ஒரு பிரதமரால் சில தரப்பு மக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை கருத்தாக்கம் சேர்க்கப்பட்டது’ என்றார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு பதிலளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், `மதச்சார்பின்மை இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25, மத சுதந்திரம் பற்றி குறிப்பிடுவது அவருக்கு தெரியவில்லை. அவர் அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படிக்க வேண்டும்’ என்றார்.