ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு பங்கேற்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், இண்டியா கூட்டணித் தலைவர்கள் தில்லியில் இன்று கூடவுள்ளார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது தயார் நிலையில் இருப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மற்றும் ரீமல் புயல் பாதிப்பு காரணமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அவர் தெரிவித்துவிட்டார். திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என தொடக்கத்தில் செய்திகள் வெளியான நிலையில், இவருடைய தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

திமுக சார்பில் டி.ஆர். பாலு பங்கேற்பார் என மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பாஜகவின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பாஜகவுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.

பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in