
இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பேரணி நடத்துவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டதாக கடந்த வாரம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், அது தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த இரு விவகாரங்களையும் முன்வைத்து இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இன்று (ஆக. 11) பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`தேர்தல் ஆணையத்தை தனது தேர்தல் மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, அது மக்களின் ஆணையைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இந்த மோசடியின் வீரியத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இன்று, இண்டியா கூட்டணி எம்.பி.க்களின் பேரணியை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வழிநடத்துவதால், எங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1) கணினியால் அணுகக்கூடிய வகையில் ஒவ்வொரு மாநிலத்தின் முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும்,
2) அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும்
3) நமது ஜனநாயகத்தின் மீதான இந்த நாசவேலை குறித்து சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தவேண்டும்.
இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. இந்திய ஜனநாயகத்தை பட்டப்பகலில் பாஜக கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்’ என்றார்.