சுதந்திர நாள் விழா: முதல்வர் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்! | MK Stalin

"விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்."
சுதந்திர நாள் விழா: முதல்வர் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்! | MK Stalin
1 min read

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நாடு முழுக்க 79-வது சுதந்திர நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். கொடியேற்றிய பிறகு நாட்டு மக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இந்த உரையில் 9 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

  1. "விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாநில அரசு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  2. விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு மாநில அரசு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  3. விடுதலைப் போராட்ட வீரர்கள் வழித்தோன்றல்களின் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, சிவகங்கை மருது சகோதரர்கள் மற்றும் வ.உ. சிதம்பரனார் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ. 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  4. இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  5. இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  6. தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ. 22 கோடியில் கட்டப்படும்.

  7. தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

  8. ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்துக்கு ஓர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.

  9. தமிழ்நாட்டுக் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ. 15 கோடியில் இணைய வழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்" ஆகிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

MK Stalin | Independence Day | Independence Day Celebration | Tamil Nadu | 79th Independence Day Celebration | 79th Independence Day

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in