
மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துவதால், மத்திய (வரி) வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 24) காலை நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`கடந்த 15-வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 2,200 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தரவேண்டும்.
இந்த திட்டங்களுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பெயரிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.
நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உள்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிடவேண்டும்’ என்றார்.