
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் துரதிஷ்டவசமானது என செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிச. 23-ல் மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற இடத்தை இன்று (டிச.27) காலை பார்வையிட்டார் அமைச்சர் கோவி. செழியன், அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை செயலர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கோவி. செழியன் பேசியவை பின்வருமாறு,
` ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளின் செயல்பாடுகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அவர்களை அழைத்துப் பேசுமாறு அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறோம்.
அந்தக் குழுவிடம் (பாதிக்கப்பட்ட மாணவி சார்பில்) புகார் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையிடம் புகார் சென்றபிறகு அதற்குப் பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்கியது. குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்த தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்குத் தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் முழு ஒத்துழைப்பை வழங்கும்.
இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைத்தவர்களால், இது ஊடகங்களில் பரபரப்பாக்கப்பட்டது. இது மாணவ மாணவியர் நலன் குறித்த பல்கலைகழக விவகாரம். குற்றவாளியைக் கைது செய்து விசாரணை நடைபெற்றுவரும் வேளையில், இதை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேட வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை.
இன்று காலை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். நுழைவாயில்கள், சிசிடிவி கேமராக்கள், இரவு நேர விளக்குகள் ஆகியவை குறித்து விரிவாக ஆராய்ந்தோம். பல்கலைக்கழக நேரங்களைத் தவிர பிற நேரங்களில் யார் வந்தாலும் அவர்களின் அடையாள அட்டை விவரங்களைக் காட்டிய பிறகுதான் உள்ளே அனுமதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
பல்கலைக்கழகத்திற்கு உள்ளே வரும் வாகன எண்களையும் குறித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம். நடந்த சம்பவத்தை நியாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த சம்பவம் துரதிஷ்டவசமானது’ என்றார்.