இபிஎஸ் நீக்கிய முக்கியத் தலைவர்கள்: யார் யார் தெரியுமா? | AIADMK |

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் 9 பேர் இதுவரை நீக்கம்...
அதிமுக தலைமை அலுவலகம் (கோப்புப்படம்)
அதிமுக தலைமை அலுவலகம் (கோப்புப்படம்)ANI
2 min read

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இதுவரை அதிமுகவில் இருந்து 14 முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின் மட்டும் 9 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தார். அதன் பின் கட்சியின் முக்கிய தலைவராக வி.கே. சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி. தினகரன் துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2017-ல் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி செயல்பட்டது. 2017-ல் பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அதன்பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர்.

இதைத் தொடர்ந்து, 2018-ல் அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த கே.சி. பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் வா. புகழேந்தியும் நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா 2021-ல் நீக்கப்பட்டார். சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக அன்வர் ராஜா கருத்துக்களைத் தெரிவித்துவந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியை அவர் ஒருமையில் இழிவாகப் பேசிய ஆடியோ வெளியாகிச் சர்ச்சையைக் கிளப்பியது. அதனடிப்படையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

இதனிடையே அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் ‘ஒற்றைத் தலைமை’ பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து 2022-ல் நடந்த பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதன் எதிரொலியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான ஜெ.சி.டி பிரபாகர், வைத்தியலிங்கம், பி.எ. மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டார்கள். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பின் உடனே, ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் ஆகிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

அதே ஆண்டு ஓ. பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது 2025 அக்டோபர் 31-ல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.

Summary

In AIADMK, since the demise of former Chief Minister and AIADMK General Secretary Jayalalithaa, 14 key leaders have been expelled from the party so far. Notably, after Edappadi Palaniswami assumed the role of General Secretary, 9 individuals have been expelled.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in