
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முன்கூட்டியே உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் அக்டோபர் 24 அன்று உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 24 அன்று உருவாகும் என்று கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 21 அன்றே உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.