அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டுள்ள இந்த பொய் வழக்கிலிருந்து மீண்டு வருவேன் என புழல் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது, 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று, அதை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
கடந்தாண்டு ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் புழல் சிறையிலிருந்து இன்று இரவு 7.15 மணியளவில் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்தார்.
திமுக தொண்டர்கள் புழல் சிறை வெளியே செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பை அளித்தார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"என் மீது அன்பும் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த திமுக தலைவர் தமிழ்நாட்டு முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடமைப்பட்டுள்ளேன். என் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு. இந்தப் பொய் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வழக்கிலிருந்து மீண்டு வருவேன்" என்றார் செந்தில் பாலாஜி.
இதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.