சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்: இளையராஜா

சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது.
சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்: இளையராஜா
படம்: ஐஐடி மெட்ராஸ், இளையராஜா

சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது.

இந்தியப் பாரம்பரிய இசையை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கான அமைப்பு ஸ்பிக் மெகே. இந்த அமைப்பு சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாசார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின்போது, மேஸ்ட்ரோ இளையராஜா இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த மையத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இசையில் புதுமைகளைக் கொண்டு வந்து, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசியதாவது:

"என் வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான நாள். ஒரு சிறுவன் கிராமத்திலிருந்து இசைக் கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்தான். வரும் நேரத்தில் அவனுடைய தாயார், அவனுக்கும் அவனுடைய சகோதரர் பாஸ்கருக்கும் கையில் 400 ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தார். அப்போது இசைப் பற்றி தெரியாது. கற்றுக்கொள்வதற்காக அந்தச் சிறுவன் சென்னை வந்தான்.

சென்னை வந்து இதுநாள் வரை இசையைக் கற்றுக்கொண்டிருக்கிறேனா என்றால், உண்மையில் நான் இசையைக் கற்றுக்கொள்ளவில்லை.

இப்படியாக இசையைக் கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்த நான், ஒரு மையத்தை அமைத்து அந்த மையத்தின் மூலம் அனைவருக்கும் இசையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்டுள்ளது.

நான் பிறந்த ஊரில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், கற்றுக்கொடுப்பதற்கு ஆள் இல்லை. தேடிக்கொண்டே இருந்தேன் கிடைக்கவில்லை.

ஒருவனுக்குத் தண்ணீர் கொடுக்காதே, தாகத்தை உண்டாக்கு. தாகத்தை உண்டாக்கினால், அவனே நிச்சயமாகத் தண்ணீரைத் தேடி கண்டுபிடித்துக்கொள்வான்.

படிப்பதாக இருந்தாலும் சரி, எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் சரி அதில் தாகம் ஏற்பட்டால், அது ஒரு முயற்சியுடன், கடின உழைப்புடன், உத்வேகத்துடன் சேர்ந்து செய்தால், எந்த இடத்தையும் அடையலாம். அப்படி செய்யும்போது இது சாதனையாகவே தெரியாது.

நான் சாதித்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. அன்றைய நாள் கிராமத்திலிருந்து எப்படி வந்தேனோ அப்படிதான் இன்றும் இருப்பதாக நான் உணர்கிறேன்.

சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். இசையைக் கற்றுக்கொள்வதில்லை. இசை எனக்கு மூச்சாகிவிட்டது. சுவாசிப்பதைப்போல இசையும் எனக்கு இயற்கையாகவே நடக்கிறது.

எட்டுத் திக்கும் சென்று கலையைக் கற்றுக்கொண்டு, கலைச் செல்வங்களை நம் மண்ணில் குவிக்க வேண்டும் என்றார் பாரதி. ஆனால், எட்டுத் திக்கும் சென்று கலைச் செலவங்களை அங்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையில் இந்தப் பயிற்சி மையம் அமைய வேண்டும்" என்றார் இளையராஜா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in