
ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால் அதை நிரூபித்துக் காட்டுங்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று (செப்.18) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு ஆலோசனைக் கூடம் நடைபெறுகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது -
”பூத் கமிட்டி எத்தனை அமைத்திருக்கிறார்கள் என்பதைப் பரிசீலனை செய்தோம். இன்னும் நகர வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதை அளந்தோம். குறைகளையும் தடைகளையும் அறிந்து, என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.” என்று கூறினார்.
இதற்கிடையில் கர்நாடகத்தில் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு,
”ஆமாம், அது அப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இப்போது இந்த விவகாரம் உங்கள் கையில் இருக்கிறது. எனவே, நீங்கள் தேவையான குரலை எழுப்ப வேண்டும். நான் தேவையான ஜனநாயக குரல் எழுப்புவேன், ஆனால் ஊடகங்கள் உண்மைகளைப் பற்றி பேச வேண்டும். ராகுல் காந்தி சொலவ்து ஆதாரமற்றது என்றால், ஏன் புகார் எழுந்தது? அது ஆதாரமற்றது மற்றும் உண்மையில்லாதது என்றால், அதை நிரூபியுங்கள். அவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.”
இவ்வாறு பதிலளித்தார்.
நாளை (செப் 19) கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.