முடிந்தால் பெரியார் குறித்துப் பேசி வாக்கு கேளுங்கள்: சீமான்

சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் எனப் பேசுங்கள்.
முடிந்தால் பெரியார் குறித்துப் பேசி வாக்கு கேளுங்கள்: சீமான்
1 min read

`பெரியார் பெரியார் என்பவர்கள் முடிந்தால் பெரியார் குறித்துப் பேசி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு கேளுங்கள்’ என செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் இன்று (ஜன.21) `கள் விடுதலை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் கள் விடுதலை இயக்கத் தலைவர் நல்லசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது,

`கருணாநிதி ஆட்சி செய்தபோது மருந்து, மாத்திரை, அரிசி, பருப்பு, எண்ணெய் என எதுவுமே போரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குச் செல்லவிடாமல் அவர் தடுத்தார். (போர் நடந்தபோது) கடற்கரையின் ஒரு ஓரத்தை தளர்த்துமாறு என்னிடம் தலைவர் கூறினார். ஆனால் அது குறித்துப் பேசக் கருணாநிதி எனக்கு நேரம் கொடுக்கவில்லை.

இரு முனைப் போட்டி ஈரோடு கிழக்கில் நிலவுகிறது. தேர்தல் களம் எங்களுக்கானது என்றுதான் நாங்கள் நினைப்போம். எந்தக் களத்தையும் எங்களுடையதாக மாற்றுவதுவதுதான் எங்களது களப்பணி. எங்களுக்கான களமாக அதை மாற்றுவோம். (திமுகவை எதிர்த்து) நான் ஒருவன்தானே நிற்கிறேன்.

இத்தனை அமைச்சர்கள், இத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எதற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறீர்கள். எதற்காக ஓட்டுக்கு காசு கொடுக்கிறீர்கள். பெரியார் பெரியார் என்று பேசும் பெருமக்கள், அது பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள், பெரியார் குறித்துப் பேசி வாக்கு கேளுங்கள்.

தாலி பெண்களுக்கு அடிமைச் சின்னம், சாமி கும்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள், தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி எனப் பெரியார் பேசியதைக் குறிப்பிட்டு வாக்கு கேளுங்கள். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என ஒருமுறை பேசுங்கள்.

பெரியாரைச் சொல்லி வாக்கு வாங்கப்போகிறீர்களா? காந்தி படத்தைக் காட்டி வாக்கு வாங்கப்போகிறீர்களா? என்னதான் உங்கள் கொள்கை? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டி வாக்கைப் பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது.’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in