
பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டம் வேண்டாம் என்றால், அதற்கான மாற்று இடத்தை விஜய் தெரிவிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களை இன்று (ஜன.20) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது,
`தமிழ்நாட்டிற்குப் புதிய விமான நிலையம் தேவைப்படுகிறது. நிலத்தை தேர்வு செய்வது எப்போதுமே மாநில அரசின் உரிமை. இந்தப் பணியில் திமுகவும், அதிமுகவும் ஈடுபட்டன. ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான முதலீட்டில் அமையும் புதிய பசுமை விமான நிலையத்தில் மத்திய அரசு வசம் 51 சதவீத பங்குகள் இருக்கும்.
இந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் அரசியலுக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. மாநிலம் வளர்ச்சி அடைய, சென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவை. விஜயிடம் என்ன பரிந்துரைகள் இருந்தாலும், அதை அவர் மாநில அரசிடம் தெரிவிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட நிலத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றால் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதலாம். 2014-ல் மோடிஜி பிரதமர் பதவிக்கு வந்தபோது இந்தியாவில் மொத்தம் 73 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 158 விமான நிலையங்கள் உள்ளன.
தமிழ்நாட்டிற்கு புதிய விமான நிலையங்கள் தேவை. இல்லையென்றால், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கைத் தமிழகம் அடைய முடியாது. விஜய் போன்ற புதிய அரசியல்வாதிகள் இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்திற்கான புதிய இடத்தை விஜய் முன்மொழிய வேண்டும்.
இந்த திட்டம் வேண்டாம் என்று ஒரு அரசியல்வாதி பொத்தாம் பொதுவாகப் பேசிவிட முடியாது. வேறு ஏதாவது இடம் குறித்த யோசனை விஜயிடம் உள்ளதா? புதிய பசுமை விமான நிலையம் தேவை என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது, ஏனென்றால் மாநிலம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.
அதேநேரம் நிலத்தைத் தேர்வு செய்வது மாநில அரசின் உரிமை. மாநில அரசின் தேர்வுப்படியே மத்திய அரசால் முடிவெடுக்க முடியும். இந்த விவகாரம் பிரச்னைக்குரியதாக விஜய் கருதினால், தகுந்த ஆலோசனையை அவர் வழங்கவேண்டும். பரந்தூர் மக்களுடன் நாங்களும் நிற்கிறோம். அவர்களுக்குக் நியாயமான குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை தீர்க்கவேண்டியது மாநில அரசின் கடமை.