தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் 14,016 பேருந்துகள் இயக்குவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் தனியார் பேருந்துகளை ஸ்டிக்கர் ஒட்டி அரசு இயக்கும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவலளித்துள்ளார் தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசியவை பின்வருமாறு:
`பொதுமக்கள் தீபாவளியை ஒட்டி பயணம் செய்வதற்கு ஏதுவாக 14,016 பேருந்துகள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அக்.28 முதல் 30 வரை சென்னையில் இருந்து மட்டும் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் 4,900 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 11,176 பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகளை இயக்கும்போது ஏற்படும் நெரிசல்களை தவிர்ப்பதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, பெங்களூரூ மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கே.கே. நகரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கும் திட்டமில்லை. தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிவருவதற்கு ஏதுவாக பல ஊர்களில் இருந்து 3,165 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படுகிறது.
9445014436 என்ற எண்ணிற்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேருந்துகள் தொடர்பான விவரங்களை பயணிகள் அறியலாம், புகார் அளிக்கலாம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கட்டணமில்லா 1800 425 6151 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
ஒரு வேளை எதிர்பார்த்ததைவிட பயணிகள் எண்ணிக்கை கூடுதலாக வந்தால், புதிய நடைமுறையாக இந்த முறை தனியார் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி அரசே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பேருந்துகளில் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்றார்.