
பெரியார் பேசியதை எடுத்துப் பேசுவதால், என் கருத்து தவறெனில் அதற்கு பெரியார் தான் பொறுப்பேற்க வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அண்மைக் காலமாக சீமான் மற்றும் நாம் தமிழர் தொடர்புடைய செய்திகள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தந்தை பெரியார் குறித்து கடலூரில் சீமான் அண்மையில் பேசிய கருத்துகள் சர்ச்சையாகின. இதற்கு பெரியாரிய அமைப்புகள் சீமானுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.
இவற்றுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் சந்தித்ததாக வெளியான புகைப்படத்தை தானே தொகுத்துக் கொடுத்ததாக திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார். இதுவும் நாம் தமிழர் மற்றும் சீமானுக்கு எதிராக பெரும் விமர்சனமாக மாறியது.
பெரியாரிய இயக்கங்கள் சீமான் இல்லத்தை இன்று முற்றுகையிட முயற்சித்து கைதாகினர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பெரியார் கருத்து குறித்தும் பிரபாகரனுடனான புகைப்படம் குறித்தும் விளக்கமளித்தார்.
"என் கருத்து தவறு என்றால், பெரியார் கருத்துதான் தவறு. நான் புதிதாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பெரியார் சொன்னதை, பேசியதை எடுத்துப் பேசுகிறோம். அதில் தவறு உள்ளது என்றால் பெரியார் தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
நான் கேட்பதில் இந்தக் கருத்து தவறு, அந்தக் கருத்து தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எது தவறு என்பதைச் சொல்ல வேண்டும்.
ஆதாரம் எதற்காகக் கேட்கிறார்கள்? அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். விசாரணையின்போது ஆதாரம் கேட்பார்கள், அப்போது காட்டுவேன். எதன் அடிப்படையில் பேசினோம் என்பதைச் சொல்வோம்.
பிரபாகரனுடனான புகைப்படத்தை தொகுத்துக் கொடுத்ததாக சொல்பவர் யார்? 15 வருடங்களாக எங்கே சென்றிருந்தார்? இவர் எதற்காகப் படத்தை வெட்டி ஒட்டி கொடுக்க வேண்டும். அதற்கான தேவை என்ன?
எங்கிருந்து அந்தப் படத்தை எடுத்தார், எப்படி வெட்டிக் கொடுத்தார்? அவர் என்னை நேரில் சந்தித்ததுண்டா, பேசியதுண்டா?
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நான் ஆதரித்துப் பேசியபோது, அவர் என்னிடம் பேசினார். அவர் வெங்காயம் படத்தை எடுத்தார். அதனால், வெங்காயங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
பெரியார் மீது அடி விழுந்தவுடன், பிரபாகரன் பொய் என்று வருகிறார்கள். பெரியாரா, பிரபாகரனா என மோதுவென்று முடிவாகிவிட்டது. மோதிப் பார்த்துவிட வேண்டியதுதானே?" என்றார் சீமான்.