
பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் தேவைப்படும் என்று பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருவண்ணாமலையில் இன்று (பிப்.12) செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது, பிரஷாந்த் கிஷோர்-விஜய் சந்திப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
`அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்று செய்தி ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். வியூக வகுப்பு என்பதில் எனக்குப் பெரிய உடன்பாடு இல்லை. நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த முன்னோர்கள் வியூக வகுப்பில் ஈடுபடவில்லை.
ஓமந்தூர் ராமசாமி, குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோர் இப்படிப்பட்ட வியூக வகுப்பாளர்களை வைத்துக்கொண்டதில்லை. என் நாடு என் மக்கள் என் நிலம் என் காடு என் மலை, என இவற்றில் எவற்றுக்கு எதைச் செய்யவேண்டும் என்பது தெரியாமல் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்?
அரியலூரின் ஜெயங்கொண்டத்திலும், திருவண்ணாமலை செய்யாறிலும் யாரை நிறுத்துவது என்பது கூடத் தெரியாமல் இருந்தால் எப்படி? எனக்கு நிறைய அறிவு இருக்கிறது, ஆனால் காசுதான் இல்லை. கத்தரிக்கை என்று தாளில் எழுதி எந்தப் பயனும் இல்லை.
நிலத்தில் இறங்கி விதையைப் போட்டு, செடியை முளைக்க வைத்து, தண்ணீர் ஊற்றி, உரம் வைத்து, காயை விளைய வைக்கவேண்டும். அப்போதும் கத்தரிக்காய் கிடைக்கும். மேஜை மீது அமர்ந்துகொண்டு கத்தரிக்கை என்று எழுதி எந்தப் பயனும் இல்லை. குறிப்பிட்ட சில காலமாக இந்த நோய் இருக்கிறது.
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாடு குறித்து என்ன தெரியும்? வாய்க் கொழுப்பு, உடல் கொழுப்பு என்பதைப் போல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் தேவைப்படும்’ என்றார்.