
கடந்த மே 24 அன்று தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஷிவ ராஜ்குமாரை பாராட்டிப் பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து பிறந்ததுதான் உங்கள் மொழி என கன்னடத்தைக் குறிப்பிட்டது சர்ச்சையானது. இந்நிலையில், அது தொடர்பாக இன்று (மே 30) விளக்கமளித்துள்ள கமல்ஹாசன், தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன்; தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடவுள்ள கமல்ஹாசன், இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,
`முதல்வர் அழைப்புவிடுத்ததன் பேரில் (சந்தித்தோம்), மாநிலங்களவையில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளையும், தஸ்தாவேஜுகளையும் தயார் செய்து வைக்கவேண்டும் என்பதற்கான அறிவுரைகளை, முன் அனுபவம் உள்ளவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். என் குரல் அந்த அவையில் தமிழ்நாட்டிற்காக பேசவிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்காக நான் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
கர்நாடகத்தில் உங்களது படத்தை புறக்கணிப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது..
`இது ஒரு ஜனநாயக நாடு; நான் சட்டத்தையும், நீதியையும் நம்புபவன். என்றுமே அன்பு நிலைக்கும். கர்நாடகம் மீதான என்னுடைய அன்பு உண்மையானது. ஆந்திரம் மீதான என்னுடைய அன்பு உண்மையானது. கேரளம் மீதான என்னுடைய அன்பு உண்மையானது. குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்ட ஒரு சிலரைத் தவிர, இதை யாரும் சந்தேகிக்க முடியாது.
நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் தடை செய்யப்படும் என்று கர்நாடக அரசு கூறுகிறது. உங்கள் தரப்பில் இருந்து மன்னிப்பு தெரிவிக்கப்படுமா?
ஏற்கனவே முன்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்கமாட்டேன். இதுவே எனது வாழ்க்கை முறை; தயவுசெய்து அதை மாற்ற முயற்சிசெய்யவேண்டாம்.
மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய காலகட்டத்தில் குடும்ப அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தை குழி தோண்டி புதைக்கிறது திமுக என்று எதிர்ப்பு அரசியல் செய்தீர்கள். இன்றைக்கு உறவு என்று வந்திருக்கிறீர்கள்..
நாட்டுக்குத் தேவை என்பதால் வந்திருக்கிறேன்.