
ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து இன்று (நவ.11) உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமைச் செயலாளர் என். முருகானந்தம்.
தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட அதிகாரியாக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குநராகவும், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சுற்றுலாத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார் சத்யபிரதா சாஹூ. புதிய தலைமை தேர்தல் அதிகரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டதை அடுத்து, சத்யபிரதா சாஹூவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் இயக்குநர் பதவியில் இருந்த அருண் தம்புராஜ் ஐஏஎஸ், தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் நல ஆணையர் பொறுப்பில் இருந்த அதுல் ஆனந்த், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குநராக செயல்பட்டு வந்த ஆர்த்தி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.