
ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணி இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (ஜன.31) வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பொது (சிறப்பு ஏ) துறையின் அரசாணை எண் 365-ல் வெளியிடப்பட்டுள்ள புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரங்கள்,
தருமபுரி மாவட்ட ஆட்சியராக ஆர். சதீஷும், திண்டுக்கல் ஆட்சியராக எஸ். சரவணனும், திருவள்ளூர் ஆட்சியராக எம். பிரதாப்பும், கிருஷ்ணகிரி ஆட்சியராக சி. தினேஷ் குமாரும், விழுப்புரம் ஆட்சியராக எஸ். ஷேக் அப்துல் ரஹ்மானும், திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜும், திருப்பத்தூர் ஆட்சியராக வி. மோகனசந்திரனும், திருநெல்வேலி ஆட்சியராக முனைவர் ஆர். சுகுமாரும், திருவாரூர் ஆட்சியராக கே. சிவசௌந்தரவள்ளியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலரான செல்வி அபூர்வா ஐஏஎஸ் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதனால், செல்வி அபூர்வாவுக்குப் பதில் வேளாண் உற்பத்தி ஆணையாளராகவும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலராகவும் வி. தக்ஷிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சிறப்பு செயலராக எஸ். கணேஷும், உள்துறையின் கூடுதல் செயலராக ஷங்கர் லால் குமாவத்தும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், டி. பாஸ்கர பாண்டியன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தின் திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கே. சாந்தி பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராகவும், ஜெ. இன்னசென்ட் திவ்யா தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும், ஆர். கண்ணன் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் இயக்குநராகவும், டி. சாரூ ஸ்ரீ கருவூலக் கணக்குத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.