அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகாவிஷ்ணு பேசியதை தான் ஆதரிக்கவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:
"தாங்கள் மதமாற்றம் செய்வதாக மதமாற்றம் செய்யக்கூடிய நபர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள். விருப்பப்பட்டு மதம் மாறக்கூடியவர்களாக இருந்தால் பிரச்னை அல்ல. ஆனால் ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றி மதம் மாற்றுபவர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் பெருமையாக பேசுவதையெல்லாம் இந்த அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், பள்ளிக்கூடத்தில் மகாவிஷ்ணு பேசுகிறார். அவர் பேசிய விஷயத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், இரண்டு விதமான நடவடிக்கைகள். சிறுபான்மை மக்களென்றால் ஒருவிதமான நடவடிக்கை.
விநாயகர் சதுர்த்தி வந்தது. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறார்கள். இது வேறொரு நாட்டின் பண்டிகையா? விநாயகர் அகவல் என்பது நம் தமிழ் மூதாட்டி ஔவையார் கொடுத்தது. அந்த விநாயகர் சதுர்த்திக்குக் கூட மாநிலத்தின் முதல்வர் வாழ்த்து கூற மாட்டேன் என்றால், இதுதான் அவர்களுடைய மதச்சார்பின்மை.
இதைதான் நாங்கள் திரும்பத் திரும்ப பேசுகிறோம். வாக்குவங்கிக்காக இன்னொரு மதத்துக்கு ஒரு வாழ்த்து. இன்னொரு மதத்துக்கு வாழ்த்து இல்லை. மாநிலத்தின் முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர்" என்றார் வானதி சீனிவாசன்.
அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் அறிவியலுக்குப் புறம்பாகவும் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். இவரை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.