
`பெரியார் பேசியவை அனைத்தையும் படித்துவிட்டு என் மக்கள் அதை ஏற்றுக்கொண்டால், நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று பேட்டியளித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தந்தை பெரியார் பேசியதாகக் குறிப்பிட்டு, கடந்த வாரம் சில சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்தார் சீமான். திகவினரும், தபெதிகவினரும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர், பெரியார் அவ்வாறு பேசியதற்கு ஆதாரம் அளிக்குமாறு சீமானுக்குச் சவால் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜன.9-ல் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், `பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது பொய் எனக் கூறுவது எப்படி? எதற்கு ஆதாரம் தேவை? நாங்கள்தான் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறோம். நாங்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் போதவில்லையென்றால், பெரியார் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் இன்று (ஜன.12) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொங்கல் விழாவில் பங்கேற்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியவை பின்வருமாறு,
`பொது விவாதத்திற்கு நான் தயார். உங்களில் எந்தப் பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, என் முன் நிறுத்துங்கள். அம்பேத்கரையும், பெரியாரையும் ஒரே நேர் கோட்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள். அம்பேத்கரிஸ்டுகளும், பெரியாரிஸ்டுகளும் வந்து எந்தெந்த சிந்தனையில் அவர்கள் இருவரும் ஒத்துப்போகிறார்கள் என்பதை நிரூபியுங்கள். நான் மன்னிப்பு கேட்கிறேன்.
(பெரியார் குறித்து) நான் படித்ததைக் காட்டினால் அதைப் போலி என்கிறீர்கள். எனக்கு முன்பு சீதையின் மைந்தன் மற்றும் ஏராளமானோர் இது குறித்துப் பேசியுள்ளனர். இதைப் பேசினார் என்றுதான் சீதையின் மைந்தன் சிறையிலடைக்கப்பட்டார். ஆதாரத்தைப் பூட்டி வைத்தால் அதை அப்படி நிரூபிப்பது?
தத்துவவாதிகள் சாக்ரடீஸ், எங்கெல்ஸ், மார்க்ஸ், லெனின், அம்பேத்கர் என அனைவரைப் பற்றியும் எங்களால் படிக்க முடிகிறது. அதுபோலப் பெரியார் பேசியவை அனைத்தையும் வெளியிடுங்கள். அதைப் படித்துவிட்டு என் மக்கள் ஏற்றுக்கொண்டால், நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்.