என்னை விமர்சிப்பவர்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்
PRINT-97

என்னை விமர்சிப்பவர்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்

நிறைய பேர் என் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர், அந்த விமர்சனங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Published on

என்னுடைய செயல்பாடுகள் மூலம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் தமிழகத்தின் புதிய துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின்.

இன்று (செப்.29) காலை சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியவை பின்வருமாறு:

`கழகத் தலைவர், தமிழக முதல்வர் அவர்கள் நேற்று இரவு எனக்கு துணை முதலமைச்சர் என்கிற புதிய பொறுப்பை வழங்கியுள்ளார். இது பதவி அல்ல, பொறுப்பு. இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். இன்னமும் அதிகமாக மக்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்பை தலைவர் வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வர், கழகப் பொதுச் செயலாளர், அனைத்து மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின்படி எனது பணிகள் அமைந்திருக்கும். எனக்கு நிறைய நபர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நிறைய நபர்கள் என் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அந்த விமர்சனங்களுக்கும் சேர்த்து எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்களை எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறேனோ, அதேபோல விமர்சனங்களையும் உள்வாங்கிக்கொள்கிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை திருத்திக்கொள்வதற்கும், என் பணிகள் இன்னமும் சிறப்பாக அமைவதற்கும் தலைவரின் வழிகாட்டுதலின்படி என்னுடைய பணிகள் அமையும்.

நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும்போது இதேபோல விமர்சனங்கள் எழுந்தன. சட்டமன்ற உறுப்பினரானபோதும், அமைச்சரானபோதும் விமர்சனங்கள் எழுந்தன. என்னுடைய செயல்பாடுகள் மூலம் அவற்றுக்கு பதிலளிப்பேன்.  அனைத்து விமர்சனங்களையும் வரவேற்கிறேன், உள்வாங்கிக்கொள்கிறேன்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in