
எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என 20 வருடங்களுக்கு முன்பே நான் தெரிவித்தேன், ஆனால் அதற்கு நானே முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என்பது அர்த்தம் அல்ல என பழனியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளாவன்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியவை,
`நாம் இந்த அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தபோதே வைத்த முழக்கம், எளிய மக்களை அதிகார வலிமையுள்ளவர்களாக மாற்றவேண்டும் என்பதுதான். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதை அவ்வளவு இலகுவாக எட்டிப்பிடித்துவிட முடியாது. எப்போது நீங்கள் முதலமைச்சராகப் போகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
எப்போது நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என அவர்கள் கேள்வியை மாற்றிக்கேட்டிருக்கலாம். இரண்டும் ஒன்றுதான். இங்கே முதலமைச்சரா, பிரதமரா என்பது அல்ல. அடிமைகளாக உழலுகிற மக்களை ஆளும் சக்தி கொண்டவர்களாக வலுப்பெறச்செய்ய வேண்டும். அதிகார வலிமை உள்ளவர்களாக வலுப்பெறச்செய்ய வேண்டும்.
எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என 20 வருடங்களுக்கும் முன்பு ஒரு பத்திரிக்கைக்கு நான் பேட்டியளித்தேன். அப்படியென்றால் நானே முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என்பது அர்த்தம் அல்ல. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று பொருள். எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என என் பேட்டிக்குத் தலைப்பு வைத்தனர்.
இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். கோலம் போடுவதற்கு நிறைய புள்ளிகள் தேவை. ஒரு புள்ளியை வைத்து மட்டும் கோலம்போட முடியாது. அதைப் போல அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியாது. நாம் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலுப்பெற்று வருகிறோம்.
இன்றைக்கு மஹாராஷ்டிர மாநிலத்தில் சிறுத்தைக் கொடி பறக்கிறது. தென்னிந்திய மாநிலங்களிலும் சிறுத்தைக் கொடி பறக்கிறது. மக்களுக்கு நம் மீது உருவாகியிருக்கும் நம்பிக்கையை தக்க வைக்கும் வகையில், நம்முடைய கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதற்காகவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என அறிவித்திருக்கிறோம்’ என்றார்.