நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன்: சீமான் மனைவி கயல்விழி

அவர் ஊரில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு வந்து வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள்.
நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன்: சீமான் மனைவி கயல்விழி
2 min read

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பட்ட விவகாரத்தில், அவர் இல்லத்தில் வேலை பார்த்த இருவரை நீலங்கரை காவல்துறையினர் நேற்று (பிப்.27) கைது செய்தார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சீமான் மனைவி கயல்விழி இன்று (பிப்.28) காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

`நேற்று (பிப்.28) அவர்கள் திட்டமிட்டு அவ்வாறு நடந்துகொண்டார்கள். அமல்ராஜ் அண்ணனைக் கைது செய்து அழைத்துச் செல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நேற்றே நான் செய்தியாளர்களை சந்தித்திருக்கவேண்டும். காழ்புணர்ச்சியால்தான் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தெரிந்தும் நான் அமைதியாக இருந்தேன்.

அமல்ராஜ் அண்ணனும், சுபாகரும் வீடு திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நேற்று இரவு அவர்களை காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் வைத்துவிட்டார்கள். இதற்குமேல் பேசாமல் இருந்துவிடக்கூடாது என்று எண்ணி, என்ன நடந்தது என்பதைக் கூற செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

நேற்று சம்மனைக் கொண்டுவரும் தகவல் எனக்குக் கிடைத்தது. அன்றைக்கும் அதேபோல வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இருந்து சம்மனைக் கொண்டுவந்து அவரிடம் (சீமான்) கையெழுத்து வாங்கிவிட்டு திரும்பிச் சென்றார்கள். அப்போதே அடுத்த 2 வாரங்களுக்கு தேதியில்லை என்று அவர் கூறினார்.

முன்பே அவர்களிடம் கூறியபடி நேற்று எங்கள் தரப்பு வழக்கறிஞர் வளசரவாக்கத்திற்கு சென்றார்கள். அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டபிறகு, அங்கிருந்து ஆய்வாளர் கிளம்பி வருகிறார் என்று என்னிடம் தகவல் தெரிவித்தார்கள். சரி, கையெழுத்துப்போட்டு சம்மனை வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் இருந்தேன்.

ஒரு வேளை சம்மனை என்னிடம் கொடுக்க விருப்பமில்லை என்றால் வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம். அவர் கிருஷ்ணகிரியில் இருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அங்கே அருகிலிருக்கும் காவல்நிலையத்தின் மூலம் அவரிடம் சம்மனை கொடுத்திருக்கலாம். சம்மனுடன் வந்தவர்கள் எதுவுமே கூறாமல், சம்மனை ஒட்டிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

என்னை அழைத்து சம்மன் ஒட்டப்பட்ட தகவலை சுபாகர் தெரிவித்ததும், சரி என்று பதிலளித்துவிட்டு சிறிது நேரம் கழித்துதான் கீழே இறங்கி வந்தேன். காவல்துறையினர் ஒட்டிவிட்டு கிளம்பிவிட்டால் நீங்கள் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வழக்கறிஞர்கள் என்னிடம் கூறினார்கள்.

பாலியல் குற்றம் என்று கூறி எத்தனை வருடம்தான் இதை இழுத்தடிப்பார்கள்? வழக்கை விரைவாக விசாரிக்கக் கூறி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது சரி. ஆனால் அவர் ஊரில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு வந்து வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள். என்னிடம் பேசியிருக்கலாம்.

ஆனால் யாரும் வீட்டில் இல்லை என்பதுபோல ஒட்டிவிட்டுப்போய்விட்டீர்கள். நான் கீழே வந்து பார்த்ததும், செய்தியார்கள் நின்றுகொண்டிந்தார்கள். இரவு உடையில் இருந்ததால் வெளியே வர எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனவே அந்த தம்பியிடம் கூறி நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன்.

அதை படிப்பதற்காகவே கிழிக்கச் சொன்னேன். இரண்டு மூன்றாக கிழிந்திருந்ததால் நான் அதை உள்ளே வைத்து படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாயிற்கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது. நீலாங்கரை ஆய்வாளர் பிரவீனின் சத்தம் கேட்டது.

அண்ணன் அமல்ராஜை அவர்கள் இழுத்துச் செல்லும்போது எப்படி நான் அமைதியாக இருக்க முடியும்? எங்களுடன் இருப்பவர்களை கைது செய்தால் நாங்கள் மேலும் கோபப்படுவோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உளவியல்ரீதியாக எங்களை புண்படுத்தவேண்டும் என்றே காவல்துறையினர் அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

வெளியே வந்து நான் பார்த்தேன். அமல்ராஜ் அண்ணன் முன்னாள் ராணுவ வீரர். ஆனால் அவரை குப்பைபோல தூக்கிப்போட்டுச் சென்றார்கள். துப்பாக்கி வைத்திருப்பதற்கு அவருக்கு உரிமம் உள்ளது. என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. சம்மனை ஒட்டி விட்டு வளரசவாக்கம் காவல்துறையினர் திரும்பிவிட்டார்கள்.

உடனே அதைப் பார்க்க நீலாங்கரை காவல்துறையினர் வரவேண்டிய அவசியம் என்ன?’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in