ரூ. 4 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன் விளக்கம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்றிரவு புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
ரூ. 3.99 கோடி ரொக்கப் பணத்தை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றதாக இவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டார்கள்.
இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். எனக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

